Type Here to Get Search Results !

யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்

யாழ்ப்பாணப் பொது நூலகம்

யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது 1981 சூன் 1 இல் எரிக்கப்பட்டுச் சாம்பலானது.

இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை. இந்த நிறுவனத்துக்கான கரு கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது.


நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இது.இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள்.

அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன. 1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது.

 நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இக்குழு இது தொடர்பில் இந்திய நிபுணர்களினதும் உதவிகளைப் பெற்றுக்கொண்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணியும் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. திராவிடக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார்.

கட்டிடத்தை இரண்டு கட்டங்களில் கட்டிமுடிக்கத் தீர்மானித்து, முதற்கட்டமாக கட்டிடத்தின் முன்பகுதிக்கான அடிக்கல் 1953 மார்ச் மாதத்தில் நாட்டப்பட்டது. கட்டிடவேலைகள் தாமதமாகவே நடைபெற்றன. 1959 இல் கட்டிடவேலைகள் முற்றாக முடிய முன்னரே, அப்போது யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா நூலகத்தின் திறப்புவிழாவை நடத்தினார். 

 யாழ்ப்பாணக் கோட்டை


யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும்.



முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்த அரசின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளது.
போத்துக்கீசர் காலம் 

யாழ்ப்பாண அரசு 1619 இல் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை நல்லூரிலிருந்து அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு கோட்டையையும் கட்டினர். 1619 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள கோவாவிலிருந்த தலைமையகத்திலிருந்து பிலிப்பே டி ஒலிவேராவுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை 1625 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது.

1629 இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், 1637 இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே கத்தோலிக்கத் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், வைத்தியசாலையொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன. போத்துக்கீசரின் யாழ்ப்பாண நகரம் (போர்த்துக்கேயர் குடியேற்றம்) கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது. 

ஒல்லாந்தர் காலம்
யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ஜூன் 22 இல் கைப்பற்றினர். போர்த்துக்கேயரின் கோட்டையையே ஒல்லாந்ததும் சில ஆண்டுகள் பயன்படுத்தினர். பின்னர் அதனை இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள். முதலில் ஐங்கோணக் கோட்டையின் உள் அரண்களையும், பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் வெளிச் சுற்று அரண்களையும் கட்டினர். 

தற்காலம்
 1984–1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதிகாக்கும் படை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கோட்டையை முற்றுகையிட்ட புலிகள் பல மாதங்களின்பின் அதனைக் கைப்பற்றிக்கொண்டனர். கைப்பற்றிய சிறிது காலத்தில் மீண்டும் இவ்வாறான நிகழ்வைத் தடுக்க கோட்டையின் பெரும்பகுதி புலிகளின் ஆலோசனையின் கீழ் அழிக்கப்பட்டது. 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் மீண்டும் கைப்பற்றியபோது இக்கோட்டையின் எச்சங்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்தன.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad