Type Here to Get Search Results !

Srilanka இலங்கையில் பௌத்த வரலாற்றை தோற்றுவித்த மன்னன்.

மகாமேகவனத்தின் கொடிவீட்டில் அமர்ந்தபடி, இலங்கையின் வரலாற்றில் மாறாப்பெருமையும், முக்கியமும் பெற்ற பண்டுகாபய மன்னனின் வாரிசான மூத்தசிவன் தன்னுடைய வாழ்வின் இறுதிநாட்களை எண்ணி காத்துக்கொண்டுருந்தார். மூத்தசிவனுக்கு 10 புதல்வர்களும் 2 புதல்வியரும் இருந்தனர். மரபுரிமையின் பிரகாரம் தந்தைக்கு பின்பு தலை மகனையே ஆட்சியை தொடர்ந்திருக்க வேண்டும். 

எனினும் இங்கு அவ்வாறு நிகழவில்லை. அநுராதபுர ஆட்சியின் வரலாற்றில் அவருக்கிணையான அமைதியான ஆட்சியை பிறிதொரு மன்னரும் மேற்கொண்டதில்லை. 60 வருடங்களாக தன்னுடைய ஆட்சியில் நிலவிய அமைதியும், சௌபாக்கியமும் தனக்கு பின்னும் தொடர்வதற்கு உரியதோர் அரசியல் வாரிசை ஆட்சியில் ஏற்ற வேண்டிய சந்தர்ப்பம் நெருங்கிக்கொண்டிருந்ததை மூத்தசிவன் உணரத்தலைப்பட்டார்.

 தன் மைந்தருள் திறமையும் அறிவும் மிக்கவனான தீசன் எனும் இரண்டாவது புதல்வனை அடுத்த அரசனாக பிரகடனம் செய்து மூத்தசிவன் தன்னுடைய அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக்கொண்டு இறையடி சேர்ந்தார். கி.மு.307 இன் மார்கழி பூர்ணிமை அன்று தீசன் இலங்கையின் புதிய மன்னனாக பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டான். தீசனின் ஆட்சியில் மக்கள் சொல்லுமளவுக்கு எந்த குறைகளும் இல்லாது இனிதாக வாழ்ந்து வந்தனர். தீசனின் ஆட்சியில் இலங்கை தீவின் பல பகுதிகளிலும் சிறப்பான நன்னிமித்தங்கள் தோன்றின. பல்லாண்டுகாலமாக நிலமகளின் மடியில் புதையுண்டிருந்த உலோகங்களும், மாணிக்கங்களும் தன்னியல்பாக வெளிப்பட்டன. 

செல்வங்கள் நிறைந்த பெரும் நாவாய் ஒன்று சூறைக்காற்றால் அடிக்கப்பட்டு சிதைவுண்டு இலங்கையின் கரைகளை அடைந்தது. தீவின் தலைநகரான அனுராதபுரத்தில் இருந்து தெற்கு திசையில் இரண்டு யோஜனா தொலைவில் அமைத்திருந்த சத்தாமலை எனும் பகுதியில் தேர்த்துலாவின் தடிப்பை கொண்ட தங்க,வெள்ளி,பலவர்ண பூக்களின் நிறத்தில் விளைந்த மூன்று பெரும் மூங்கில்கள் தோன்றின. கயா, ஹாயா, ரதா, அமலகி, அங்குலி, வைத்தக, கும்பக், வளைய, பரகதிக எனும் எண்வகை முத்துக்களும் ஒரே நாளில் கரையொதிங்கின. 

இதனை கண்ட மக்கள் இவ்வனைத்து செல்வங்களையும் ஒன்று திரட்டி அனுராதபுரத்திற்கு கொண்டுவந்து மன்னன் தீசனுக்கு அன்பளித்தனர். அவற்றை மனமுவந்து வாங்கிக்கொண்ட தீசன் அச்செல்வங்களின் மதிப்பை உணர்ந்து அவற்றை தன்னுடைய மனதுக்கினிய நண்பனுக்கு அளிப்பதே பொருத்தமானதாக அமையும் என எண்ணினான். அந்நண்பன் உலக வரலாற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்தியாவின் பெரும் சக்ரவர்த்தியான அசோகர். அசோகரை சந்தித்து பரிசில்களை கையளிப்பதற்காக விசேட தூதுக்குழு ஒன்று ஒதுக்கப்பட்டது. அசோகருக்கும் தனக்கும் நிலவிய நட்பினை மனதில் நிறுத்தி, அக்குழுவின் தலைவனாக தன்னுடைய சொந்த மருமகனும் முதன்மை அமைச்சனுமான மகா அரிட்டனை நியமித்தார். 

மேலும் அரசின் பிரதம புரோகிதர், அரசின் தனாதிகாரி, அமைச்சர் ஒருவர் என மொத்தம் நான்கு பேர் அடங்கிய தூதுக்குழுவாக அது அமைந்தது. மூவகை இரத்தினங்கள், சத்தாமலையில் இருந்து பெறப்பட்ட அரசுதேருக்கான மூன்று மூங்கில் துலாக்கள், வலம்புரி சங்குகள், எண் வகை முத்துக்கள் மற்றும் மேலும் பல செல்வங்களுடன் தூதுக்குழுவானது ஜம்புகோளப்பட்டினத்தின் (தற்போதைய யாழ்ப்பாணம்) துறையில் இருந்து பயணப்பட்டனர். பதினான்கு நாட்கள் பயணத்தை தொடர்ந்து, மௌரிய சாம்ராஜ்யத்தின் தலைநகர் பாடலிபுத்திரத்தை அடைந்தனர் தீசனின் தூதுக்குழுவினர். 

லங்காபுரியில் இருந்து தன் அன்பு நண்பன் அனுப்பிய அனைத்து பரிசல்களையும் மனமுவந்து ஏற்றுக்கொண்ட அசோக சக்ரவர்த்தி தூதுக்குழுவினர்க்காக தனிமாளிகை ஒன்றை ஒதுக்கி விருந்தினரை சிறப்பாக கவனித்து கொண்டார். அடுத்துவந்த நாட்களில் தன்னுடைய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு மகா அரிட்டனுக்கு ‘சேனாபதி’ என்ற பட்டத்தையும், பிராமனருக்கு ‘புரோகிதர்’ பட்டத்தையும், தனாதிகாரிக்கு ‘தண்டநாயகன்’ பட்டத்தையும், அமைச்சருக்கு ‘சேதி’ பட்டத்தையும் வழங்கி கௌரவித்தார். 

ஐந்து மாத காலம் பாடலிபுத்திரத்தில் தங்கிய அரிட்டனின் குழுவினர் நாடு திரும்பும் போது அசோகர் தீசனுக்காக பட்டாபிஷேக வஸ்துக்களை பரிசில்களாக அனுப்ப முடிவு செய்தார். அதன் பிரகாரம் யாக் மாட்டின் மயிரால் செய்யப்பட்ட பீலிவிசிறி, மகுடம், உடைவாள், தங்கப்பாதுகைகள், வெண்குடை, தலைப்பாகை, காதணிகள், சங்கிலிகள், பொற்குடங்கள், சந்தனக்கட்டைகள், உயர் பட்டாலான துவாய்கள், நாகர்களிடம் இருந்து பெற்ற ஆபரணங்கள், வாசனைத்தைலங்கள், செம்மண், கங்கைநதி நீர், அனோத்தை ஏரி நீர், தங்கப்பாத்திரங்கள், மதிப்புமிக்க அம்பாரி, அரிய மூலிகைகள், பழங்கள், நூற்றியறுபது மூட்டை மலையரிசி என பல்வேறு பரிசில்கள் தயார்செய்யப்பட்டன. 

இவற்றுக்கு மேலாக தீசனுக்காக மௌரிய அரசகுலத்தில் பிறந்த இளவரசி ஒருத்தியும் பரிசாக வழங்கப்பட்டது அவர்கள் நட்பின் உறுதியை வெளிப்படுத்தி காட்டியது. இந்த பரிசில்களுடனும், தீசனுக்கான ஒரு தனிப்பட்ட செய்தி ஓலையுடனும் அரிட்டனின் குழு தாமிரலிப்தி (தமியிற்றியா) துறையில் இருந்து புறப்பட்டு கடல்வழியாக தாய்த்தேசம் திரும்பினார்கள். பாடாலிபுரத்தில் இருந்து மீண்ட அரிட்டன் தீசனை சந்தித்து அசோகரின் ஓலையை கையளித்தான். அவ்வோலை இலங்கையின் வரலாற்றில் பெரும் மாற்றத்தை உருவாக்கவுள்ளதை தீசனோ, அரிட்டனோ அறிந்திருக்கவில்லை. ஓலையை பிரித்த தீசன் அவற்றில் பொதிந்திருந்த வார்த்தைகளின் மீது கண்களை ஓட்டினான். Newsletter

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad