Type Here to Get Search Results !

தமிழர் நாகரிக தொடக்கத்தை சங்க இலக்கியங்களிலிருந்து புதுக்கித் தரும் தொல்லியல் ஆய்வுகள்


கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.3ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் நிலவிய பண்பாட்டுக் காலத்தை சங்ககாலம் என்பர். இக்காலம் தமிழ் பண்பாட்டுருவாக்கத்தில் மிக முக்கியமான செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் உலகின் எந்தவொரு இடத்திலிருந்தும் தமிழ் பண்பாட்டின் தொன்மை பற்றி ஆராய முற்படும் ஒருவர் அதன் தொடக்கப் புள்ளியாக சங்க இலக்கியத்தை இன்றும் எடுத்துக் கொள்கின்றனர். பெருங்கற்கால முதிர்ச்சி நிலையில் உருவான இச்சங்க காலமானது தமிழ் பண்பாட்டு வாழ்வுப்புலத்தை அகம், புறம் எனப்பிரித்து அடையாளப்படுத்தியது. அதுவே பழந்தமிழ் இலக்கியங்களாக கருதப்படும் சங்க இலக்கியங்களின் பாகு பொருளாகவும் இருந்துள்ளது. இலக்கியங்கள் காலத்தைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாக விளங்குவதனால் தமிழரது பண்பாட்டையும் படம்பிடித்து காட்டியிருக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ் பண்பாடு பற்றிய ஆய்வில் சங்க இலக்கியங்கள் முக்கியத்துவப் படுத்தப்படுகின்றன.

இன்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற ஒரு முடிவு அல்லது ஆய்வு என்பது பல்துறைசார்ந்த பங்களிப்புடன் கூடியதாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கேற்ற வகையில் பழமை பற்றிய ஆய்வுகளில் விஞ்ஞானம் சார்ந்த நவீன ஆய்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த அணுகுமுறை சங்க இலக்கயம் அல்லது பழந்தமிழ் இலக்கியம் கூறுகின்ற வரலாற்றை மீளாய்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் தமிழ் பண்பாட பற்றிய ஆய்வில் சங்க இலக்கியம் கூறும் செய்திகளே உண்மையான முடிவாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று தமிழ் பண்பாட்டின் தொன்மை பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் ஒருவர் வெளியிடும் முடிவானது சங்க இலக்கியம் காட்டும் தமிழ் பண்பாட்டை மறுதலிப்பதாகவுள்ளது. அது பல்வேறு விதமான பண்பாட்டம்சங்களில் முரண்பட்டுச் செல்வதை அவதானிக்கலாம்.

உலகில் தோன்றிய அனைத்து மனித இனங்களையும் நல்ல பண்பாடு நோக்கித் திசைப்படுத்தியதில் அக்கால மக்கள் பின்பற்றிய மதங்களுக்கு முக்கிய பங்குண்டு. பல்வேறு பண்பாடகள் மதத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளதை இன்னும் அவதானிக்கலாம். தொல்லியல் நோக்கில் மதம் அல்லது சமயம் எனப்படும் பண்பாட்டம்சமானது பெருங்கற்கால சவ அடக்கமுறை வணக்கத்திலிருந்து வருகின்றது. அதற்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் இயற்கை கூறுகளை வழிபட்டிருக்கின்றனர்.

பெருங்கற்கால முதிர்ச்சி நிலையில் உருவாகிய சங்க காலமானது. இக்காலத்திலும் நடுகல் வழிபாடு இருந்தமைக்கு சான்று பகர்கின்றது. போரில் இறந்த வீரனுக்கு ஊர் எல்லையில் கல் நாட்டு வழிபடுகின்ற மரபை புறநானூற்றுச் செய்யுள்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனோடு தெய்வ வழிபாடுகளும் இருந்திருக்கின்றன. குறிப்பாக ஆகமம் சாராத நாட்டார் வழிபாட்டு மரபுகளும், பிற்காலத்தில் ஆகம வரையறைக்குள் வந்துவிட்ட வழிபாட்டு மரபுகளும் சங்க காலத்தில் நிலவியதாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. உதாரணமாக நாட்டார் வழிபாட்டுத் தெய்வங்களான காளி, வீரபத்திரர், வைரவர் போன்றனவும், ஆகம வழிக்குள் வரும். திருமால், சிவன், முருகன், கொற்றவை போன்ற வழிபாடுகளும் மட்டுமே சங்க கால மதப்பண்பாடாக பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் குறுகிய பரப்பில் அதிக வரலாற்றை பதிவு செய்யும் நோக்குடன்; பொறிக்கப்படும் கல்வெட்டுக்கள் இதற்குப் புறம்பான செய்திகளைத் தருகின்றது. தமிழகத்தில் இதுவரை வாசிக்கப்படுகின்ற சங்ககாலக் கல்வெட்டுக்களில் நூற்றி இருபதுக்கும் மேற்பட்டவைகள் சமண, பௌத்த மதம் பற்றிய செய்திகளைத் தருகின்றன. சமூகத்தில் உயர் அந்தஸ்த்தில் இருந்தவர்கள் சமண, பௌத்த துறவிகளுக்கு அளித்த தானம் பற்றிய குறிப்புக்களை அவை தருகின்றன. சங்க இலக்கியங்களில் இச்சமயங்கள் சமகால தமிழகச் சமூகங்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தமையைக் குறிப்பிட்டிருந்தமைக்குச் சான்றுகளில்லை. 

இதனை விட சங்க காலத்தில் நிலவிய முக்கிய நகரங்களான நாகபட்டிணம், கருவூர், ஆதிச்ச நல்லூர், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் பௌத்த விகாரைகளும், தூபிகள் பற்றிய எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தொல்லியல் ஆதாரங்கள் மட்டுமன்றி இலங்கையில் எழுந்த பாலி இலக்கியங்களும் சங்ககாலத்தில் அஜீவக மதங்களான பௌத்தம், சமணம் மேன்மை பெற்றிருந்தமைக்குச் சான்றுகளைத் தருகின்றது. சமகாலத்தில் புத்தகோசர். புத்த தர்மர் எனும்; இரண்டு துறவிகள் இலங்கை வந்திருக்கின்றனர். வட்டகாமினி, மகாசேனன் காலத்தில் ஏற்பட்ட மகாஞான பௌத்தமத ஆதிக்கமானது தமிழகத்திலிருந்தே ஏற்பட்டுள்ளது. இதனோடு சைவத்தையும், தமிழையும் காக்கவென பல்லவர் காலத்தில் உருவாகிய பக்தி இயக்கமானது தமிழகத்தில் பௌத்த. சமண மதங்களுடனேயே போட்டியிட வேண்டியிருந்தது. எனவே இதற்கு முற்பட்ட காலங்களில் குறிப்பிட்ட அஜீவக மதங்களின் செல்வாக்கு தமிழக்கத்தில் தீவிரம் பெற்றுக்காணப்பட்டுள்ளது. ஆனால் தமிழரின் பண்பாட்டை பேசிய சங்க இலக்கியங்கள் சமகாலத் தமிழகத்தில் நிலவிய இப்பண்பாட்டை வெளிப்படுத்தத் தவறியுள்ளன. 

எந்தவொரு இனமும் நாகரீக நிலையை அடைவது எழுத்தின் அறிமுகத்துடனேயே அந்தப் பின்னணியில் தான் பெருங்கற்காலத்தில் அறிமுகமான எழுத்தின் உபயோகத்தினோடு நாகரீக நிலையை அண்மிக்கின்றன. இந்தப் பின்னணியில் தான் சங்க காலத் தமிழகத்திலும் எழுத்து மரபு தோன்றியது. மொழி தோன்றி பல ஆண்டுகளுக்கு பின்பே அம்மொழிக்குரிய வரிவடிவம் தோற்றம் பெறுவதற்கு சாத்தியம் உண்டு. தமிழகத்தில் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து எழுத்து தோன்றியது. இது இந்நூற்றாண்டுக்கு முன்னரே தமிழ் பேசுகின்ற மக்கள் இங்கு உருவாகிவிட்டதைக் குறிப்பிடுகின்றது. 

பழந்தமிழ் இலக்கியங்கள் சங்க காலத்தில் அரசர்களும் அவைக்களத்தாரும், புலவர்களும், பாணர்களும் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்ததாக குறிப்பிடுகின்றது. ஆனால் பெறுங்கற்கால பண்பாடு பற்றிய ஆய்வுகளில் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொல்லியல் மையங்களில் எழுத்து வாசனையுடைய மக்கள் வாழ்ந்துள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக அப்பண்பாட்டு வழிவந்த மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் தமிழ் வரிவடிவத்தில், தமிழ் மொழியில் மட்பாண்ட உரிமையாளர் அல்லது செய்தவரின் பெயரும், ஊதின் பெயரும் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். இதிலிருந்து மட்பாண்டம் உற்பத்தி செய்தவர்களும், சாதாரண மக்களும் பழந்தமிழ் இலக்கியம் தோன்றிய காலத்தில் எழுத்தறிவுடையவர்களாக இருந்தனர் என்பது தெரிய வருகின்றது. ஆகவே மண் பாட்டின் தொடக்க காலத்தில் சாதாரண மக்களின் கல்வி அறிவு பற்றி சங்க இலக்கியம் கூறும் செய்திகளை சமகால கல்வெட்டில் அல்லது மட்பாண்ட சாசனங்களோடு ஒப்பு நோக்குகின்ற போது வேறுபட்டட நிலைகளையே அறிய முடிகின்றது. ஆகவே சங்க இலக்கியங்கள் பழந்தமிழ் பண்பாடு பற்றிய பார்வையில் போதாமைகளை வெளிக்காட்டி நிற்கின்றதெனலாம்.

சங்க இலக்கியம் அதிக இடங்களில் பண்டமாற்று சமூகம் பற்றிய செய்திகளையே குறிப்பிடுகின்றன. சில இடங்களில் வணிகம்; பற்றி கூறுகின்றன. வணிக மயப்பட்ட பொருளாதாரத்தில் முக்கிய இடம் பெறும் காசு உரிய நோக்கத்திற்கு பயன்பட்டமைக்கான சான்றுகளைச் சங்க இலக்கியங்கள் தரத்தவறியுள்ளன. காசு சங்க இலக்கியங்களில் உவமையாக பெண்ணுக்குரிய அணிகலனாக, குற்றத்தைக் குறிப்பதாக குறிப்பிடப்படுகின்றது. ஆனால் தொல்லியல் ஆய்வுகளில் சேர, சோழ, பாண்டியருக்குரிய தனித்துவ நாணயங்கள் கிடைக்கின்றன. அவற்றில், ஊர். பெயர் போன்றன குறிப்பிடப்படுகின்றன. இதனைக் கொண்டு அக்காலத்தில் வெளிநாட்டு வர்த்தகமும், காசு வெளியிடும் முறையும் காணப்பட்டதெனலாம். இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளில் மீட்கப்பட்ட இவ்வகை நாணயங்கள் விளங்குகின்றன.

சமீப கால ஆய்வுகளில் சேர, சோழ, பாண்டிய நாணயங்கள் மட்டுமன்றி மலையமான் போன்ற குறுநில மன்னர்களும் நாணங்கள் வெளியிட்டமைக்கு பரவலான ஆதாரங்கள் கிடைக்கின்றன. அதில் மன்னரின் பெயர், அரச வம்சத்தின் பெயர், பொறிக்கப்பட்டிருப்பதுடன் சேர மன்னர்கள் சாத்தன், மகாசாத்தன், குற்றுவன், குற்றுவன் கோதை, கொல்லிரும் பொறை முதலான பெயர்களுடன், ரோம நாட்டுடன் கொண்ட வணிக தொடர்பால் ரோம நாணயங்களைப் போல் தாம் வெளியிட்ட நாணயங்களையும், தமது உருவங்களையும் பொறித்துள்ளனர். இந்நாணயங்கள் உள்@ர் வர்த்தகத்திற்கு மட்டுமன்றி வெளிநாட்டு வர்த்தகத்திலும் பயன்பட்டதென்பதை தமிழகத்துக்கு வடக்கே இந்திய நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட நாணயங்களும், தெற்கிழக்காசியா, இலங்கை போன்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சோழ, பாண்டிய நாணயங்களும் உறுதி செய்கின்றன. இதில் சிறப்பாக நோக்கத்தக்க விடயம் சங்க இலக்கியத்தில்; சொல்லப்படாத சில மன்னர்களது பெயர்களும், நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து சமகாலத் தமிழகத்தில் ஆட்சி புரிந்த சில மன்னர்களையும் புதிதாக அறிந்து கொள்ள முடிகின்றது. எனவே இவ்விடயத்திலும் பழந் தமிழ் இலக்கியங்கள் ப+ரணத்துவமின்மையை வெளிப்படுத்தியுள்ளன.

சங்க இலக்கியங்களில் தமிழகம் கடல் கடந்து கடாரம், ஈழம் முதலான நாடுகளுடன் வணிக பட்டிணப்பாலையில் வரும் ஒரே ஒரு குறிப்பு உறுதி செய்கின்றது. அத்துடன் யவனர்களுடனான வணிக உறவு பற்றிய செய்திகளும் காணப்படுகின்றன. ஆனால் ரோம நாட்டவர் தமிழகம் வந்து தங்கியிருந்து வணிகம் செய்தமையை பற்றியோ, தமிழக வணிகர்கள் ரோம் சென்று வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டமை பற்றியோ சங்க இலக்கியத்தில் விரிவாக கூறப்படவில்லை. ஆனால் சமீபத்தில் அரேபிய பாலைவனம், எகிப்தின் முக்கிய துறைமுகமான பெரிக்கே, சமீபத்தின் வியன்னா அருங்காட்சியகத்தில் கிடைத்த அரிய கையெழுத்துச்சவடி தென்கிழக்காசியா, யப்பான் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் என்பனவற்றிலிருந்து சங்க காலத் தமிழகம் மேற்காசியா, தென்கிழக்காசியா, கிழக்காசிய நாடுகளுடன் மிக நெருங்கிய வணிக உறவை கொண்டிருந்தமையை புலப்படுத்துகின்றது. ஆகவே சங்க காலத்தில் நிலவிய வணிக பண்பாட்டை சரிவர புலப்படுத்துவதில்; சங்க இலக்கியங்கள் ப+ரண நிலையைப் பேண தவறியுள்ளன எனலாம்.

பழந்தமிழர் பண்பாடு பற்றிய ஆராய்வில் சங்க இலக்கியங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஆன போதிலும் அது தரும் தகவல்கள் சமகால பிற ஆய்வகளினால் கேள்விக்குட்படுத்தப்படுபவையாக அமைகின்றன. இதற்கு சங்க இலக்கியங்கள் எழுந்த காலம் ஒன்றாகவும், அவை தொகுக்கப்பட்ட காலம்; இன்னொன்றாகவும், அச்சேறிய காலம் வேறொன்றாகவும் இருப்பதே காரணம் எனலாம்.     

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad